All Articles
சுற்றுப் பொருளாதாரம்
சுற்றுப் பொருளாதாரம் என்பது வளங்களை நாம் எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதைப் பற்றிச் சிந்திக்கும் ஒரு புதிய வழியாகும். ஒரு நேரியல் பொருளாதாரத்தில் நாம் வளங்களை எடுத்துக் கொள்கின்றோம், பொருட்களை உருவாக்குகின்றோம், பின்னர் அவற்றை தூக்கி வீசுகின்றோம். இருப்பினும் நாம் சுற்றுப் பொருளாதாரத்தில் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் வளங்களைப் பயன்படுத்த முயற்சிக்கின்றோம்.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின்படி சுற்றுப் பொருளாதாரம் ‘கழிவைக் குறைப்பதையும் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது’. இதில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன.
1. சக்தி மற்றும் வளங்கள்: நாங்கள் தயாரிப்புகளை மீண்டும் மீண்டும பயன்டுத்தும் வகையில் வடிவமைக்கின்றோம். இதன் பொருள் நாம் வளங்களை வீணாக்கமாட்டோம் மற்றும் அவற்றை நீண்ட நேரம் பயன்படுத்த முடியும்.
2. இயற்கையின் சுழற்சிகள் மற்றும் வடிவமைப்புகளைப் பின்பற்றுதல்: சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் வளங்களைப் பயன்படுத்த இயற்கையின் சுழற்சிகளை நகலெடுக்க முயற்சிக்கின்றோம்.
3. புதுப்பிக்கத்தக்க சக்தி: புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்த முயற்சிக்கின்றோம். அதனால் உலகிலுள்ள அனைத்து வளங்களையும் நாம் பயன்படுத்துவதிை;லை.
சுற்றுப் பொருளாதாரத்தின் நன்மைகள்
1. கழிவுகளைக் குறைத்தல் – பெரும்பாலான தயாரிப்புக்கள், மீண்டும் பயன்படுத்த, பழுதுபார்க்;க, மற்றும்; மறுசுழற்சி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் பொருள் கழிவுகள் உருவாவதைக் குறைத்தலாகும். அத்துடன் புதிய தயாரிப்புக்களை உற்பத்தி செய்ய குறைவான வளங்களே பயன்படுத்தப்படுகின்றன.
2. வளங்களைப் பாதுகாத்தல் – சுற்றுப் பொருளாதாரமானது வளங்களை முடிந்தவரை குறைவாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பொருட்களை மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதன் மூலம் வளங்களை நாம் பாதுகாக்க முடியும்.
3. பச்சை வீட்டுவாயு உருவாக்கத்தைக் குறைத்தல் – புதிய பொருட்களை உற்பத்தி செய்யத் தேவையான வளங்களின் அளவைக் குறைப்பதன் மூலம் பச்சை வீட்டுவாயு உருவாக்கத்தைக் குறைப்பதற்கு சுற்றுப் பொருளாதாரம் உதவும்.
4. புதிய பொருளாதார வாயப்புக்களை உருவாக்குதல் – சுற்றுப் பொருளாதாரத்தினூடாக பழுதுபார்த்தல், மறுசுழற்சி, புதுப்பித்தல் சேவைகள் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களுக்கான புதிய சந்தைகள் போன்ற புதிய பொருளாதார வாயப்புக்களை உருவாக்க முடியும்.
5. வளப் பாதுகாப்பை மேம்படுத்துதல் – சுற்றுப் பொருளாதாரமானது இறக்குமதி செய்யப்பட்ட வளங்களின் மீதான நம்பிக்கையைக் குறைத்து புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் வளப் பாதுகாப்பை மேம்படுத்த முடியும்.
மொத்தத்தில் ஒரு சுற்று அணுகுமுறையானது கழிவுகளைக் குறைத்தல், வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம்; நிலையான எதிர்காலத்தை உருவாக்க உதவும்.
ஒரு சுற்றுப் பொருளாதார மனப்போக்கை ஏற்றுக் கொள்ள மக்களை நாம் எவ்வாறு ஊக்குவிக்க வேண்டும்?
1. கல்வி மற்றும் விழிப்புணர்வு: சுற்றுப் பொருளாதாரத்தின் நன்மைகள் மற்றும் அது எவ்வாறு செயற்படுகின்றது என்பதைப பற்றி விழிப்புணர்வை அதிகரிப்பது முதற்படியாகும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சமூக மையங்கள் சுற்றுப் பொருளாதாரத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும்.
2. அரசாங்கக் கொள்கைகள்: சுற்றுப் பொருளாதார கொள்கைகளைப் பின்பற்றும் வர்த்தகர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்குவது போன்ற ஊக்குவிப்புக் கொள்கைகளையும் விதிமுறைகளையும் அரசாங்கங்கள் உருவாக்கலாம்.
3. நுகர்வோர் நடத்தை: நிலையான முறையில் தயாரிக்கப்பட்ட, எழுதில் பழுதுபார்க்கக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் தனிநபர்கள் ஒரு சுற்றுப் பொருளாதார மனநிலையைப் பின்பற்றலாம்.
4. ஒத்துழைப்பு: வாத்தகங்கள், அரசாங்கங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பானது சுற்றுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முக்கியமானது.
5. வர்த்தகக் கண்டுபிடிப்புக்கள்: வர்த்தகர்கள் தமது தயாரிப்புக்களை மிகவும் நிலையானதாக மறுவடிவமைப்பதன் மூலமும் புதிய எரிசக்தி மூலங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் சுற்றுப் பொருளாதாரத்தைப் பின்பற்றலாம்.
எது எவ்வாறு இருப்பினும் சுற்றுப் பொருளாதார செயற்பாட்டை கடினமாக்கும் பல சவால்களும் உள்ளன. போதிய உட்கட்டமைப்புக்கள் இல்லாமை, தேவைப்படும் ஊக்கத்தெகை இல்லாமை, நுகர்வோர் போதிய ஒத்துழைப்பு வழங்காமை, மற்றும் தரப்படுத்தல் இல்லாமை என்பன அவற்றுள் சிலவாகும். இச்சவால்கள் இருந்தபோதிலும் அவற்றைக் கடந்து சுற்றுப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதற்கு பல வாய்ப்புக்கள் உள்ளன. தயாரிப்பு வடிவமைப்பில் புதுமை, வர்த்தகர்கள் மற்றும் அரசாங்கங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் நுகர்வோர் மத்தியில் கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமும் இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் நமக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் மிகவும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
ஊசாத்துணை நூல்கள்
Camilleri, M.A., Sheehy, B., Fraser, K. (2023). Circular Economy. In: Idowu, S.O., Schmidpeter, R., Capaldi, N., Zu, L., Del Baldo, M., Abreu, R. (eds) Encyclopedia of Sustainable Management. Springer, Cham. https://doi.org/10.1007/978-3-031-25984-5_399
Potter, C. (2021). Welcome to the circular economy: The nest step in sustainable living. Laurence King Publishing.
Weetman, C. (2020). A circular Economy Handbook: How to build a more resilient competitive and sustainable business. 3rd Edition. Kogan Page Publication.
Dr Thivahary Geretharan
Senior Lecturer I
Department of Agricultural Economics
Faculty of Agriculture
Eastern University